பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி

0

சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற வுள்ள முதல் போட்டி நாளை (24) பிரிஸ்பேனில் உள்ள த கெப்பா (The Gabba) கிரிக் கெட் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த முதல் போட்டியை பொருத்தவரை இரண்டு அணிகளுக்கும் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக அமையவுள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்னர் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன. பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இவ்விரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் மோதல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

எனினும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளின் அண்மைய போட்டி முடிவுகள் சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. இலங்கை அணியை பொருத்தவரை இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடர் மாத்திமே மோசமான தோல்வியாக அமைந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1:0 என இழந்திருந்த போதும், குறித்த தொடரில் இலங்கை அணியின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தன.

ஆனால் அவுஸ்திரேலிய அணியானது பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வருகின்றது. இறுதியாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2:1 என இழந்திருந்தது. அதேநேரம், கேப்டவுன் (பந்தை சேதப்படுத்திய) விவகாரத்துக்கு பின்னர்  அவுஸ்திரேலிய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 தோல்விகளை சந்தித்துள்ளதுடன், ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றிருக்கிறது.

அவுஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும் போது, இலங்கை அணி கடந்த வருடம் சற்று சிறப்பான ஆட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 வெற்றிகளை பெற்றிருக்கிறது. அத்துடன், இறுதியாக டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள தென்னாபிரிக்க அணியை 2:0 என வீழ்த்தியதுடன், மேற்கிந்தியதீவுகளில் 1:1 என தொடரை சமப்படுத்தியிருக்கிறது.

இவ்வாறான நிலையில், இரு அணிகளும் தங்களுடைய பின்னடைவுகளை சரிசெய்துஇ மீண்டும் எழுச்சிப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை, இரண்டு அணிகளும் தங்களுடைய பதிவுகளை பலமாக கொண்டுள்ளன. இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணியும், 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியும் இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை. இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் விறுவிறுப்பாக இருக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு அணிகளினதும் கடந்த கால மோதல்கள்

இரண்டு அணிகளதும் கடந்த கால முடிவுகளை பார்க்கும் போது, அவுஸ்திரேலிய அணி அதிகமான ஆதிக்கத்தை கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் இதுவரை 12 இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளதுடன், இதில் 10 தொடர்களை அவுஸ்திரேலிய அணி கைவசப்படுத்தியுள்ளதுடன், இலங்கை அணி 2 தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. அதிலும், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 6 தொடர்களையும் மொத்தமாக அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியுள்ளது.

அதேபோன்று இரு அணிகளும் 29 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளதுடன், இலங்கை அணி 4 வெற்றிகளையும், அவுஸ்திரேலிய அணி 17 வெற்றிகளையும் பெற்றுள்ளன. முக்கியமாக இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் விளையாடிய 13 போட்டிகளில், எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை என்பது முக்கிய அம்சமாகும். அத்துடன், முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள த கெப்பா மைதானத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியை சமநிலைப்படுத்தியுள்ளதுடன் மற்றொரு  போட்டியில் தோல் வியடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

14 − 8 =