அரசாங்க வங்கியில் வேலை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பணம் மோசடி

0

அரச வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாணப் பொலிஸார் கோரியுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் உள்ள அரசவங்கி ஒன்றின் கிளையிலும், தீவகப் பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாகக் கூறி எட்டு பேருக்கு மேல் ஏமாற்றிப் பணத்தை மோசடி செய்த நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த மோசடியாளரால் பாதிக்கப்பட்டவர்கள் அதுதொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் பணியாற்றும் நபர் ஒருவர் ஆறு இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களுக்கு அரச வங்கியில் வேலை வாய்ப்பைப் பெற்று தருவதாகக் கூறி 4 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை பணம் கேட்டார். வங்கியில் வேலைக்கான நியமனக் கடிதம் கிடைத்ததும் பணத்தைத் தருவதாக நாங்கள் எட்டுப்பேரும் அந்த நபரிடம் கூறினோம்.
அதன் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி கொழும்புக்கு 8 பேரையும் அழைத்து 17ஆம் திகதியிடப் பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

அன்றையதினம் முதலே நீங்கள் வங்கியில் பணியாளராக இணைந்து உள்ளீர்கள் என அந்த நபர் கூறினார். நாங்களும் அதனை நம்பி மறுநாள் எமது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்த அரச வங்கியின் கிளைக்கு நியமன கடிதத்துடன் பணிக்குச் சென்றோம்.

அங்கு எமது கடிதத்தைப் பார்த்த வங்கி முகாமையாளர், இது தமது வங்கியின் நியமனக் கடிதம் இல்லை எனவும், இது போலியானது எனவும் கூறும் போதே நாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.

அதன் பின்னர் எமக்கு வேலைவாய்ப்பைப் பெற்று தருவதாகக் கூறி பணத்தை வாங்கிய நபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்தபோது, தனக்கு அது பற்றித் தெரியாது எனவும், தமக்கு வேறு நபரே வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறியதனால் அவரிடமே உங்களை அழைத்துச் சென்றேன்.

அவரிடம் தான் அது தொடர்பில் கேட்க வேண்டும் எனக் கூறி தொலை பேசியைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர் அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுகின்றது என்று பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =